தமிழகத்தில் திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதோடு நாளை முதல் தியேட்டர்களில் டிக்கெட் விலையும் உயர்கிறது.
திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படடுள்ளது. அத்தோடு மாநில அரசின் கேளிக்கை வரியும் 30 சதவிகிதம் இருக்கிறது. இந்த இரட்டை வரி விதிப்பு முறையால் கடுமையாக பாதிப்பு ஏற்படும் என்பதால் கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை முதல் திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டு இருந்தன.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன், திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் "தமிழகத்தில் கடந்த திங்கட்கிழமை முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் நாள் ஒன்றுக்கு 20 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரச்னை தொடர்பாக அமைச்சர்கள், செயலாளர்களுடன் திரைத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாக பேசி வந்தோம். எங்கள் சிரமங்களை அவர்களும் புரிந்து கொண்டு கேளிக்கை வரி குறித்து அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளனர். அதோடு எங்கள் தரப்பிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் 6 பேரும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் 8 பேரும் குழுவில் இடம்பெறுவார்கள். குழு அமைக்கப்பட்டுள்ளதையடுத்து வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு நாளை முதல் அனைத்து தியேட்டர்களும் வழக்கம்போல் இயங்கும். திரையரங்குகளில் நாளை முதல் டிக்கெட் விலையுடன் 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்" என்றார்.
எனவே தியேட்டர்களில் 120 ரூபாய் டிக்கெட் விலையுடன் 28 சதவிகித ஜிஎஸ்டி வரி சேர்த்து நாளை முதல் டிக்கெட் விலை 153.60 ரூபாயாக இருக்கும்.