தமிழ்நாடு

மதுரை: டிக்டாக் மூலம் பணம் திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய இளைஞர்

மதுரை: டிக்டாக் மூலம் பணம் திரட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிய இளைஞர்

PT

மதுரையில், இளைஞர் ஒருவர் டிக் டாக் செயலி மூலம் பணம் திரட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் செய்துள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஆதரவற்றோர்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவர்களுக்கு  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் ஏழை மக்கள் உணவின்றி தவிப்பதை பார்த்த இளைஞர் ஒருவர் டிக்டாக் மூலம் பணத்தைத் திரட்டி அவர்களுக்கு உதவியது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

 அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பொதுமுடக்கத்தால் வறுமையில் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமார் என்ற இளைஞர், அவர்களுக்காக உதவி கேட்டு டிக் டாக் செயலியில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இதனைப் பார்த்த பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நபர்கள் அவரது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளனர். அதனைக் கொண்டு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கிய மனோஜ்குமார், அவசர தேவைக்காக நிதியுதவியும் செய்தார்.