தமிழ்நாடு

உலகப் புகழ்பெற்ற உதகை மலை ரயிலின் வயது 112... கேக் வெட்டி கொண்டாட்டம்

உலகப் புகழ்பெற்ற உதகை மலை ரயிலின் வயது 112... கேக் வெட்டி கொண்டாட்டம்

kaleelrahman

உலகப் புகழ்பெற்ற உதகை மலை ரயிலின் 112 ஆவது ஆண்டு தொடங்கியதை கொண்டாடும் வகையில் உதகை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 

உலக அளவில் புகழ்பெற்ற மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை 32 பெரிய பாலங்கள், 40க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் , 16க்கும் மேற்பட்ட குகைகள் வழியாக மலைப்பாதையில் குழந்தைபோல் தவிழ்ந்து ஓடும் மலை ரயில் சேவை, குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை 1899 ஆம் ஆண்டு போக்குவரத்து துவங்கப்பட்டது.

அதேபோல குன்னூரில் இருந்து உதகை வரை 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி போக்குவரத்து துவங்கப்பட்டு இன்றுடன் 111 ஆம் ஆண்டு நிறைவு பெற்று 112 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

 இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை கொண்டாடும் வகையில் குன்னூரில் இருந்து நீராவி இன்ஜினை கொண்ட சிறப்பு மலை ரயில் உதகை வரை இயக்கப்பட்டது. அப்போது மலை ரயிலை வரவேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மலை ரயில் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் ஆகியோர் மலைரயில் தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மலைரயில் தினத்தை சிறப்பித்தனர்.