தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய ஒற்றை வார்த்தை ‘அனிதா’: வெடித்தது மாணவர் போராட்டம்

Rasus

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போராட்டங்கள் வலுத்துள்ளன.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஒற்றை கனவுடன் சிறுவயது முதலே லட்சியத்தோடு படித்த அரியலூர் மாணவி அதற்கேற்றாற் போல், பிளஸ் 2 பொதுத் தேர்விலும் 1176 மதிப்பெண்கள் பெற்றார். இடையில் எமனாய் வந்த நீட் தேர்வுக்கு எதிராக போராடி உச்சநீதிமன்றம் வரை சென்ற அவர், மனமுடைந்து பின்னர் தற்கொலை செய்து கொண்டார். அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. நேற்று தொடங்கிய இந்த போராட்டம், இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது.

நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் 300-க்கும் மேற்பட்டோர், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு நெல்லை - தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை ஓங்கி வைத்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, கடலூரில், பெரியார் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும்‌ மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்தனர்.

இதேபோன்று, கிருஷ்ணகிரியிலும் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி தூய வளனார் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு பொறுப்பேற்று மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனிடையே, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியை, மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயன்றபோது, காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் அரசுக்கல்லூரி மாணவர்கள் 500 பேர் வகுப்புகளை புறக்கணித்தனர். உச்சநீதிமன்றத்தை நாடியும் அனிதா போன்ற ஏழை மாணவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர்.

தமிழகம் மட்டுமில்லாமல், புதுச்சேரியிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. நீட் தேர்வை எதிர்த்து புதுச்‌சேரியிலுள்ள சட்டக்கல்லூரி, கலைக்கல்லூரி உள்ளிட்ட கல்‌லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அதையடுத்து ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மாணவி அனிதா உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் எனக்கூறியும் நீட் தேர்வை எதிர்த்தும் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் தடுப்புகளையும் மீறி மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்குள் செல்ல முயன்றபோது இருதரப்பினரி‌யே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரண்டு மணி நேரமாக தொடர்ந்து பதற்றமான‌ சூழ்நிலை நிலவிய நிலையில், மாணவர் கூட்டமைப்பினர் அருகே இருந்த மூன்று மாடி கட்டிடம் மீது ஏறி தற்கொலை செய்துகொள்ள முயன்றனர். அவர்களை‌ போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் கலைந்து சென்றனர்.‌