கன மழையால் இடுக்கி சாலையோரம் மலை உச்சியில் இருந்து ரம்மியமாய் கொட்டும் அருவி காண்போரை கவர்ந்து இழுத்து வருகிறது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மாலை நேரங்களில் துவங்கி இரவு வரை கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை நேற்று இடைவிடாத மழையாக பெய்தது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் பல மலைப்பகுதிகளின் பாறைகளில் ஆங்காங்கே புதிய புதிய நீரூற்றுகள் உருவாகியுள்ளன. காட்டாற்று வெள்ளம் மலை உச்சியில் இருந்து அருவியாக கொட்ட ஆரம்பித்துள்ளது.
அந்தவகையில் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையிலிருந்து இடுக்கி செல்லும் வழியில் கன மழையால் மலை உச்சியிலிருந்து அருவி கொட்டுகிறது. பச்சை பசேல் மலை பின்னணியில் வெண்மை நுரை எழுப்ப கரும்பாறைகளின் மேடு பள்ளங்களில் தவழ்ந்து எழுந்து கொட்டும் அருவியின் ரம்மிய அழகு காண்போர் கண்களை கவர்ந்திழுத்து வருகிறது.
காற்றோடு கலந்து வரும் அருவியின் சாரல் சாலையோரம் கடந்து செல்வோரை சிலிர்க்க வைத்து மகிழ்விக்கிறது. தற்போது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற இயற்கை அழகு சுற்றுலா பயணிகளின் மனதையும் குளிர்வித்து வருகிறது.