வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் இரண்டாவது நாளில் நான்கு அடி உயர்ந்தது.
முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இரண்டே நாளில் நான்கு அடி உயர்ந்து 131.30 அடியானது. அணைக்கு நீர்வரத்தும் விநாடிக்கு 7,388 கன அடியாக அதிகரித்தது. நேற்று மழை சற்றே குறைந்து சாரலாக மாறியதால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,474 கன அடியாக குறைந்தது.
இருந்தாலும் கனிசமான நீர்வரத்தால் அணை நீர்மட்டம் 132.00 அடியாக உயர்ந்துள்ளது. வரும் மூன்று நாட்களுக்கு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளதாலும் அதற்கான சூழல் நிலவுவதாலும் அணைக்கு நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பிருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அணையில் இருந்து தமிழக குடிநீர் மற்றும் பாசனத்திற்கான நீர்த்திறப்பு விநாடிக்கு 1,850 கன அடியாகவும் அணையில் நீர் இருப்பு 5,165 மில்லியன் கன அடியாகவும் இருந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்ய உள்ள மழையால், நீர்வரத்து அதிகரித்து மேலும் நீர்மட்டம் உயரும் என தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.