தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் - தமிழக அரசு

webteam

ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதற்கு நீரி அமைப்பின் அறிக்கையே ஆதாரம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. துப்பாக்கிச் சூடு காரணமாக எழுந்த அழுத்தத்தினை மறைப்பதாகவே ஆலை மூடப்பட்டதாக வேதாந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு தமிழக அரசு சார்பில் இன்றும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில், “ஆலையை இயக்க அனுமதித்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொடர்ந்து மீறப்பட்டதால், அதை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் மக்கள் நலன் கருதி ஆலையை மூட உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தடையில்லை என கூறியுள்ளது. 

உச்ச நீதிமன்றத்தில் நீரி அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் ஆலை மாசு ஏற்படுத்தியதாக கூறியுள்ளது. இதிலிருந்து மாசு ஏற்படுத்தியதற்கு ஆதாரங்கள் இல்லை என கூற முடியாது. பொதுமக்கள் போராட்டத்துக்கு பணிந்து ஆலையை மூட உத்தரவிட்டதாக ஆலை தரப்பு வாதம் தவறு. ரூ. 100 கோடி அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம், கூடுதல் இழப்பீடு கோர மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.