திருச்சி எஸ்.பி புதிய தலைமுறை
தமிழ்நாடு

”Victim shaming பண்ணக்கூடாது" மன்னிப்பு கேட்டார் வார்டன்; திருச்சி என்ஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

இந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்களிடம் விடுதி வார்டன் மன்னிப்புக் கேட்டதை அடுத்துப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி வளாகத்தில் மாணவியிடம் ஒப்பந்த ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். மாணவர்களிடம் விடுதி வார்டன் மன்னிப்புக் கேட்டதை அடுத்துப் போராட்டத்தை திரும்பப் பெற்றனர்.

என்.ஐ.டி கல்லூரி மகளிர் விடுதி அறைக்கு இணையதள வசதி ஏற்படுத்த நேற்று ஒப்பந்த ஊழியர்கள் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில் மாணவி ஒருவர் தனியாக இருந்த அறைக்கு சென்ற ஒப்பந்த ஊழியர் கதிரேசன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவி உடனடியாக விடுதி வார்டனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், வார்டன் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை வந்த பிறகே காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியர் கதிரேசன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரைக் கைது செய்தனர்.

என்.ஐ.டி இயக்குநர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்ட மாணவர்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அகிலா நேரில் வரவேண்டும் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர்.

அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியை தரக்குறைவாக நடத்தியதாகவும் சக மாணவர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, காவல் நிலையத்திற்கு வந்திருந்த கல்லூரி நிர்வாகத்தினர் தங்களை காப்பாற்றிக் கொள்ளவே முயன்றதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியின் ஆடை குறித்து வார்டன் விமர்சனம் செய்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் நேரடியாக மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதனையடுத்து,வார்டன் மன்னிப்பு கேட்டதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து இது குறித்து பேசிய எஸ்.பி வருண்குமார் ” புகார் எழுப்புபவர்களை குறைக்கூறாமல், அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற வாதத்தை மாணவர்கள் முன்வைத்தனர். எனவே இது குறித்து நிர்வாகத்திடம் கூறப்பட்டுள்ளது. எனவே, தங்களின் புகார்களை தங்கு தடையின்றி கூறலாம்.

மேலும், பாதுகாப்புவேண்டும் என்று மாணவிகள் கூறுகிறார். எனவே, பெண் காவலர்கள் மூலம் பாதுகாப்பு குறித்த கோரிக்கைகள் கேட்கப்பட்டுவருகிறது.இது போல பழைய புகார்கள் இருப்பினும் அது குறித்து கூறினால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், ஆடை அணிவது குறித்து வாடர் எழுப்பிய கேள்வியால் மிகவும் கோபமடைந்த மாணவிகள், ’எந்த ஆடை அணிந்தால் என்ன? நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.. எனவே, இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். எனவே மாணவி ஆடை ஒழுங்காக அணியாததே காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விடுதி வார்டன் மாற்றப்படுவார்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் பிரதீப் குமார் இது குறித்து தெரிவித்துள்ளார். அதில், "காவல் மற்றும் வருவாய்த் துறையினர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்துள்ளனர்; பெண்கள் விடுதிக்குள் ஆண் பணியாளர்களை அனுமதித்ததில் இருந்தே பாதுகாப்பு குறைபாடு உறுதியாகிறது. எனவே, வார்டன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்.ஐ.டி. நிர்வாகம் முடிவெடுக்கும். ”என்று ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.