இன்று அதிகாலை நேரத்தில் நாமக்கல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டடத்தின் முன்பகுதி கான்க்ரீட் தளம் இடிந்து விழுந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத் தலைவர் நடிகர் கமல்ஹாசன், "மக்கள் வரிப்பணம் 336 கோடி ரூபாய் உருமாறும் கோலம் இது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், " சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்டி முடித்து அரசியல் ஆதாயம் தேடும் அவசரக் கோலமே இந்த அலங்கோலத்திற்குக் காரணம். உயிர் காக்கும் மருத்துவமனை உருவாகும் போதே உடைந்துபோயிருக்கிறது. நினைவிருக்கட்டும்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
"நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்யாதிருங்களய்யா. மக்கள் நீதி மலர… தக்க தருணம் இதுவே" என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் வடபகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு 338.76 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்றது.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 4 தளம் உயர்ந்துள்ள நிலையில், இரண்டாவது தளத்தில், போர்டிகோவுக்கு பீம் அமைத்து கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பீம் வளைந்து, கான்கிரீட் தளம் திடீரென சரிந்து விழுந்தது. அதில் பணியில் இருந்த வட மாநில தொழிலாளர்கள் ஐந்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.