தமிழ்நாடு

கால்வாயில் மூழ்கிப் பலியான இரட்டையர்கள் - குளிக்கச் சென்ற போது பரிதாபம்

கால்வாயில் மூழ்கிப் பலியான இரட்டையர்கள் - குளிக்கச் சென்ற போது பரிதாபம்

webteam

நண்பருடன் குளிக்கச் சென்ற போது கால்வாயில் இரட்டையர்கள் மூழ்கிப் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடியை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் மோகன் (44). இவர், இதே பகுதியில் சி.டி.எச் சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஜஸ்டின் (13), ஜெபஸ்டின் (13) ஆகிய இரு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவருமே இரட்டையர்கள். இவர்கள் அதே பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இதற்கிடையில், கொரோனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு பள்ளிகளுக்கு அரசு விடுமுறை விட்டு உள்ளது. இதனையடுத்து, இன்று காலை 11.30 மணியளவில் ஜஸ்டின், ஜெபஸ்டின் இருவரும் நண்பர் தீபக் என்பவருடன் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளனர். பின்னர், மூவரும் ஆவடி அருகே கண்டிகை பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் பகுதிக்குச் சென்றதாகத் தெரிகிறது. அங்கு ஓடும் தண்ணீரில் மூவரும் இறங்கிக் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது மூவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் காப்பாற்றும் படி கூச்சல் போட்டுள்ளனர். அப்போது, அங்கு நின்ற வாலிபர்கள் ஓடி வந்து தண்ணீரில் குதித்து உள்ளனர். பின்னர், அவர்கள் தீபக்கை மட்டுமே தண்ணீரிலிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மேலும், ஜஸ்டின், ஜெபஸ்டின் இருவரும் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் சென்னையில் உள்ள தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர், ஆவடி தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதன் பிறகு அவர்கள் கிருஷ்ணா கால்வாயில் இறங்கி தண்ணீரில் 4மணி நேரம் தேடினர். பின்னர், இரவு நேரம் ஆனதால் இருளில் தேட முடியாததால் தீயணைப்பு வீரர்கள் பணியைக் கைவிட்டனர். புகாரின் அடிப்படையில் முத்தாபுதுப்பேட்டை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.