தமிழ்நாடு

மேலணையை புதுப்பிக்க அரசாணை வெளியீடு

மேலணையை புதுப்பிக்க அரசாணை வெளியீடு

webteam

முக்கொம்பு மேலணையை புதிதாக கட்ட 387 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்ட அனுமதியளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

திருச்சி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ளது முக்கொம்பு மேலணை.  1836ம் ஆண்டு கட்டப்பட்ட முக்கொம்பு மேலணை, மேட்டூர், பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை காவிரி, கொள்ளிடம் என இரண்டாக பிரித்து அனுப்ப பயன்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூடுதல் தண்ணீர் மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்டதால் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, அப்போது ஆகஸ்ட் 22ம் தேதி இரவு முக்கொம்பு மேலணையில் 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலணையில் மொத்தமுள்ள 45 மதகுகளில் 7 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டது.

இதனைதொடர்ந்து தற்காலிகமாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. பின்னர் புதிய மதகுகள் திட்டமிடப்பட்டு அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்தார். மேலும் கொள்ளிடம் அணியின் இருபுறத்திலும் ரூ.325 கோடி மற்றும் ரூ.85 கோடியில் புதிய கதவணைகள் 15 மாதங்களுக்குள் கட்டப்படும் எனவும் தெரிவித்தார்.இந்நிலையில் மேலணையை 387 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நபார்ட் வங்கி கடனுதவியுடன் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலணை புதிதாக கட்டப்படுவதால் 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலங்கள் பயனடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.