செய்தியாளர்: சந்தான குமார்
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை 219-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது...
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மருந்து வியாபாரம், போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. அதில், திமுகவை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறது. அவர்களுடைய பாதுகாப்பிலும் உதவியிலும் தான் நடப்பதாக செய்திகளில் பார்க்கிறேன். இந்த ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு கிடையாது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுவது தவறு. கொலை கொள்ளைக்கு கூலிப்படையினர் எளிதாக கிடைப்பதற்கு சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது என்பதுதான் உண்மை.
உதயநிதி துணை முதல்வரான உடனே அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டு வர போகிறாரா. மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தமிழ்நாட்டில் தினமும் ஏதாவது ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜனநாயக ரீதியாக உரிமையுடன் போராடி உரிமையை பெறுவதற்குக் கூட இந்த ஆட்சியில் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
இந்த நேரத்தில் உதயநிதி துணை முதல்வர் ஆனால் என்ன முதல்வர் ஆனால் என்ன, அவர் முதல்வரானால் நாட்டிற்கு எந்த நல்லது நடக்குமோ நடக்காதோ தெரியவில்லை. ஆனால், அவர்கள் வீட்டிற்கு வேண்டுமானால் வருமானம் பெருகி வசதிகளும் பெருகும். எந்த சூழ்நிலையில் எந்த காரணத்திற்காக கட்சி ஆரம்பிக்கபட்டதோ அதில் எந்த மாற்றமும் இல்லாத போதுஈ அதிமுகவில் இணைவது என்பதற்கான வார்த்தைக்கு இடமில்லை.
எடப்பாடி ஏதோ உளறிக் கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் அந்த கட்சியும் சின்னமும் வீழ்ச்சியடைந்து பழனிசாமி என்ற அந்த தீய மனிதரை தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டும் காலம் விரைவில் வரும். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின் கட்டண உயர்வு வந்துவிடும். தனியாரிடம் கொள்முதல் செய்தால் தான் அதில் முறைகேடு செய்வதற்கு வழி உள்ளது” என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.