தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், அரசுக்கு 2,533 கோடி ரூபாய் குத்தகை பாக்கி வைத்துள்ளது, என புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், மாநில அரசுக்கு சொந்தமான பல லட்சம் ஏக்கர் நிலங்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இதில், சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு அரசுக்கு 812 கோடி ரூபாய் குத்தகை பாக்கி வைத்திருந்ததால், ரேஸ் கோர்ஸ் வளாகத்திற்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டது. குத்தகையும் ரத்து செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து புதிய தலைமுறை, தமிழ்நாடு முழுவதும் மாநில அரசுக்கு வர வேண்டிய குத்தகை தொகை நிலுவை குறித்து, மாவட்ட வாரியாக கள ஆய்வு மேற்கொண்டது.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2,533 கோடி குத்தகை பாக்கி நிலுவையில் இருப்பது அம்பலமாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,382 கோடி ரூபாய் குத்தகைத் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அடுத்தபடியாக நீலகிரியில், 935 கோடி ரூபாயும், திருச்சியில் 75 கோடி ரூபாயும், மதுரை 41 கோடியே 60 லட்சம் ரூபாயும், கோவையில் 17 கோடியே 70 லட்சம் ரூபாயும் நிலுவையில் உள்ளது கள ஆய்வில் வெளிவந்துள்ளது.
இது தொடர்பான புதிய தலைமுறையின் சிறப்பு விவாதத்தில் பேசிய அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், நிலுவையில் உள்ள குத்தகை தொகையை வசூலித்தால், அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்தலாம் என, குத்தகை பாக்கியை அரசு வசூலிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
குத்தகை நிலுவை வைத்திருக்கும் பலர் நீதிமன்றத்தை நாடியுள்ளத்தை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாடு அரசு குழு அமைத்து நிலுவை தொகையை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கடந்த ஆட்சியில் குத்தகை பாக்கி வைத்திருப்போருக்கு எதிராக, நிலங்களை அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குத்தகை தொகை தொடர்பான விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால், தனிக்கவனம் செலுத்தி வழக்குகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த ஆட்சியில் அவ்வாறு நடைபெறுகிறதா என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசை விமர்சித்த தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச். ராஜா, குத்தகை தொகையை விரைந்து வசூலிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய 2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான குத்தகை நிலுவை தொகை விவகாரம் தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் விளக்கம் பெற முயற்சித்தோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம் என்றவர், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து பேச முடியாது என்பதோடு முடித்துக்கொண்டார். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறது? நீதிமன்ற வழக்குகளை எப்படி கையாளப்போகிறது என்பது கேள்வியாகவே இருக்கிறது.