தமிழ்நாடு

வெள்ளிக்கிழமை வரை அமமுக வேட்பாளர் மீது நடவடிக்கை இல்லை - தமிழக அரசு

webteam

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது வெள்ளிக்கிழமை வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ம் தேதி  பெரியகுளத்திலுள்ள கதிர்காமு மருத்துவமனையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு தன்னை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளித்த புகாரையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கதிர்காமு நேற்று பெரியகுளத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், “இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. இந்த வழக்கைச் சந்திக்க நான் தயாராக உள்ளேன். பெரியகுளம் தொகுதியில் அமமுகவுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதைத் தடுப்பதற்காக இதுபோன்ற பொய்யான புகாரைப் பரப்பியிருக்கிறார்கள். இது முற்றிலும் அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், கதிர்காமு முன் ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கைது நடவடிக்கை ஏதும் கூடாது எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

மேலும் தனக்கு முன் ஜாமீனும் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்ளதால் கால அவகாசம் வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் வேட்பாளராக இருக்கும் மனுதாரரை காவல்துறை கைது செய்ய வாய்ப்புள்ளதாக கதிர்காமு தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து வெள்ளிக்கிழமை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.