தமிழ்நாடு

'எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது' - நீதிமன்றம்

'எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது' - நீதிமன்றம்

JustinDurai

அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ள உயர் நீதிமன்றம், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் திரைத்துறையில் முன்னேறியுள்ளது குறித்து அவதூறாக பேசிய  நடிகை மீரா மிதுன், அந்த வீடியோவை  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலரும் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தில் கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்து இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி மீரா மிதுன் நண்பர் ஷாம் அபிஷேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் பட்டியலினத்தவர்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை எனவும், நடிகை மீரா மிதுன் பேசும்போது அருகில் மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை தரப்பில் நடிகை மீரா மிதுன் பேசுவதை  ஆதரித்ததுடன், அவர் பேசுவதற்கு உறுதுணையாக அவரது நண்பர் ஷாம் அபிஷேக் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, நம் நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் சமமானவர்கள் என்றும், எந்த ஒரு சமூகத்தை பற்றியும் தவறாக பேசுவதை ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என கருத்து தெரிவித்தார். பின் மனுதாரர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை ஏற்று, அதற்கு அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாம்: காதல் திருமணம் செய்த புதுமண தம்பதி வெட்டிக்கொலை - வீட்டிற்கு வரவழைத்து சகோதரர் வெறிச்செயல்