ஊழல் மற்றும் போக்சோ வழக்குகளில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
பேரூராட்சிகளில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிக்கிய 42 அரசு ஊழியர்களும், பிற குற்றங்களுக்காக 60 அரசு ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், பாலியல் குற்றங்களில் 232 ஆசிரியர்கள், ஊழியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கியிருப்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. குற்றங்களில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு முதல் 90 நாட்களுக்கு 50 சதவீத ஊதியமும், அடுத்த 180 நாட்களுக்கு 75 சதவீத ஊதியமும், 180 நாட்களுக்கு பிறகு முழு ஊதியமும் பிழைப்பூதியமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சரியான விளக்கம் அளிக்காததால், ஆர்.பெரியசாமி என்பவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த ஆணையர் முத்துராஜ், பணிகாலத்தில் ஊழல் மற்றும் போக்சோ வழக்குகளில் சிக்கும் அரசு ஊழியர்களுக்கு பிழைப்பூதியம் வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என அரசுக்கு பரிந்துரைத்தார். தமிழ்நாடு ஊதியம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் எனவும் மாநில தகவல் ஆணையர் பரித்துரைத்தார்.