ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் சிவச்சந்திரன் மற்றும் சுப்பிரமணியன் உடல்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சுப்பிரமணியன் உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
வீரர் சிவச்சந்திரனின் உடலுக்கு திருச்சி விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, அதிமுக கொறடா ராஜேந்திரன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். முப்படை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சிவச்சந்திரன் உடலுக்கு வீரவணக்கம் செலுத்தினர். மேலும் பொதுமக்களும் திருச்சி விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சிவசந்திரன் உடல் அங்கிருந்து சாலை மார்கமாக அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழிநெடுகிலும் சிவச்சந்திரன் உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து சிவச்சந்திரன் உடலுக்கு கார்குடி கிராமத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சிவசந்திரன் தந்தை ராணுவ உடை அணிந்து வந்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினார். அதேபோல், அவரது ஒரு வயது மகன் மொட்டை அடித்த நிலையில் ராணுவ ஆடை அணிந்து தன்னுடைய தந்தைக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினான். இது, அனைவரையும் கண் களங்க வைத்தது.