பண்டைய கால தமிழர்கள், வடநாட்டு மௌரியர்களுடன் வாணிபத் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கீழடியில் கிடைத்துள்ள வெள்ளி நாணயம் உறுதிப்படுத்துவதாக நாணயவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கீழடி அகழ்வாராய்ச்சியில் சமீபத்தில் வெள்ளி நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இது கி.பி. 303 ஆண்டுகளுக்கு முந்தைய நாணயம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த நாணயத்தின் முன்புறத்தில் கொம்புகளைக் கொண்ட எருதின் தலை, கதிர் இல்லா சூரியன், வால் சுருட்டிய நாய், ஆறு வகையான ஆயுத அமைப்பை கொண்ட சக்கரம், கதிருடன் உள்ள சூரியன், மாடு ஆகிய 6 சின்னங்கள் உள்ளன. அதேபோல் வெள்ளி நாணயத்தின் பின்புறத்தில் அரை வட்டம் காணப்படுகிறது. அதில் பாதி வடிவம் உள்ளதால் அது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர் நாணயவியல் ஆய்வாளர்கள்.
அதேபோல் வட இந்தியாவை ஆண்ட மௌரியர்கள் வெளியிட்டதுதான் மகதா நாணயம். இதன் மூலம் தமிழர்களும் வட இந்தியர்களுக்கும் இடையேயான மிகப்பெரிய வாணிப தொடர்பில் இருந்தார்கள் என்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வெள்ளி நாணயம் உறுதிப்படுத்துகிறது. இந்த நாணயம் 2.20 கிராம் எடையுள்ளது எனவும் இதிலுள்ள சின்னங்கள் தமிழ் மன்னர்களான சேர, சோழ, பாண்டியர்களின் நாணயத்தில் உள்ள சின்னங்களுடன் ஒத்துப்போவதாக நாணயவியல் ஆய்வாளர் சென்னை மணிகண்டன் கூறுகிறார். அதேசமயம் பாரத பண்பாடு கிடையாது, தமிழர் பண்பாடு தனியாக இருந்ததையும் இது உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கிறார் அவர்.