திருச்சி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருச்சி: திடீரென இடிந்து விழுந்த வீட்டின் மேற்கூரை: 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்!

திருச்சி அரிய மங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஜெனிட்டா ரோஸ்லின்

திருச்சி அரிய மங்கலத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக்கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருச்சி அரியமங்களத்தில் இருக்கக்கூடிய ரயில் நகர் என்னும் பகுதியில் ரயில்நிலையத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் இருப்பிடங்கள் அமைந்துள்ளன. தற்போது இடிந்து விழுந்துள்ள வீடானது இப்பகுதியில் வசித்து வந்த கண்ணியப்பன் என்னும் நபர் 1972 ஆம் ஆண்டு ரயில் நிலையத்தில் வேலைப்பார்த்த போது கட்டிய வீடு. இதன் பிறகு கண்ணியப்பன் மகன், மகனின் வாரிசுகள் என்று கிட்டதட்ட 50 ஆண்டுகளை கடந்துவிட்டது.

இந்நிலையில், தற்போது மாரியப்பன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி 2 குழந்தைகள் அவரின் தாயார் ஆகியோர் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் தீடீரென இடிந்து விழுந்த வீட்டின் கூரையால் இவரின் தாயார், மனைவி, 2 குழந்தைகள் என்று 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

இரவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததை அக்கம்பக்கத்தினர் அறியாத நிலையில் பகலில்தான் அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதன்பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் கட்டட இடிபாடுகலை அகற்றி இவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் தற்போது இவர்களின் உடல்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முன்னதாக துக்க நிகழ்ச்சி ஒன்றிக்கு கலந்து கொள்ள மாரியப்பன் சென்னை சென்றதால் இவ்விபத்தில் இருந்து இவர் உயிர் தப்பியுள்ளார்.