தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோயாளிகள்

webteam

தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

மக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் (ஹெச்.ஐ.வி.) தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 778 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2017-18ஆம் ஆண்டில் 10 முதல் 19 வயதுடையவர்களில் அதிகளவாக சென்னையில் 17 பேரும் திருச்சியில் 16 பேரும், விழுப்புரத்தில் 15 பேரும், வேலூரில் 14 பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்திலேயே சென்னையில்தான் அதிக அளவு பேர் எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2015 -16 ஆம் ஆண்டில் 10 முதல் 19 வயது வரையிலானவர்களில் 160 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 2017-18ஆம் ஆண்டில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. அதுவே இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் 99 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 


அதேபோல், 20 முதல் ‌25 வயதிற்குள் உள்ளவர்களில் 2015-16ஆம் ஆண்டில் 432 பேரும், 2017- 18ல் 554 பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவே இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் 318 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 2015-16 ல் 536 பேரும், 2017-18ல் 699 பேரும் இந்த ஆண்டு இதுவரையில் 435 பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

அதேநேரம் ஒட்டுமொத்தமாக கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 45 சதவிகிதமாக இருந்த நிலையில், 2018ஆம் ஆண்டில் 9 புள்ளி 54 சதவிகிதமாக குறைந்திருப்பது புள்ளி விவரங்களில் தெரியவந்திருக்கிறது.