தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரியவகை வெளிநாட்டு பறவைகள் முதன்முறையாக கோவையில் தென்பட்டுள்ளது.
கோவை ஆனைக்கட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையம் சார்பில் 25 அணிகள் கோவை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வனப்பகுதி, விளைநிலங்கள் ஆகியவற்றிலுள்ள பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டன. அதில், கோயம்புத்தூர் நேச்சுரல் சொசைட்டி என்ற அமைப்பை சேர்ந்த குழுவினர் கோவை புறநகர பகுதிகளில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்ட போது, பள்ளப்பாளையம் ஏரியில் ஜெர்மணி, ஸ்பெயின், ஐரோப்பிய மற்றும் தென்மேற்கு ஆசிய நாடுகளில் வாழும் WHITE STORK,BLACK STORK எனப்படும் அரியவகை நாரை உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் வலசை வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கருங்கால், செங்கால் என தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நாரைகள் சுமார் 3 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து கோவைக்கு வந்துள்ளது, பறவை ஆர்வலர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையை ஒட்டியுள்ள பகுதிகள், சீனா, மங்கோலியா, ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலிருந்து பறவைகள் கோவைக்கு வலசை வருவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை மற்றும் கேரளா போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட WHITE STORK,BLACK STORK எனப்படும் அரியவகை நாரைகள் தென்பட்டது ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியவகை நாரை
மேலும் அந்த அரியவகை நாரைகள் கோவையில் இரு நாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பல்லுயிர் சூழலை பாதுகாக்கும் முயற்சியாக தன்னார்வலர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி மேற்கொள்ளப்படும் இதுபோன்ற கணக்கெடுக்கும் பணியில், 200 க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இது போன்ற கணக்கெடுப்புகள் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் கட்டமைக்கவும் உதவும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.