சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வியாசர்பாடியில் பேரணி நடைபெற்றது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வியாசர்பாடியில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
அதில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகப் பதாகைகள் ஏந்தி மக்கள் சென்றனர். வியாசர்பாடி ஐயப்ப பக்தர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த அமைதிப் பேரணி பெரம்பூர் வரை சென்றது. மேலும் சபரிமலையின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என இந்த அமைதிப் பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.