தமிழ்நாடு

‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

‘குயின்’, ‘தலைவி’க்கு தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

‘தலைவி’ திரைப்படத்திற்கும் ‘குயின்’ இணையதள தொடருக்கும் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குநர் ஏ.எல்.விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதேபோல் கெளதவ் வாசுதேவ் மேனன், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற இணையதள தொடராக தயாரித்து வருகிறார். அதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இதற்கான ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. 

இவற்றிற்கு தடைகோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தலைவி’ படத்தை திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கியுள்ளது. ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என ஜெ.தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கு ஆவணங்களை கௌதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், பதில் மனுத்தாக்கல் செய்ய கௌதம் மேனன் தரப்புக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நடைபெற்றது. அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா, ‘தலைவி’ மற்றும் ‘குயின்’ ஆகிய இரண்டுக்கும் தடை விதிக்க கோரினார். ஆனால் உயர்நீதிமன்றம் ’குயின்’, ‘தலைவி’க்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. தீபா கதாபாத்திரம் ‘குயின்’ இணையதள தொடரில் இடம்பெறவில்லை என்ற கௌதம் வாசுதேவ் மேனனின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதே போல் ஏற்கெனவே வெளிவந்த புத்தகங்களை தழுவியே ‘தலைவி’ படம் எடுக்கப்பட்டு வருவதாக இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்தார். அதனை ஏற்ற நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் படம் கற்பனையானது என அறிவிப்பு வெளியிட ‘தலைவி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.