தமிழ்நாடு

20 ஆண்டுகால கோரிக்கை: தரமற்ற கட்டுமான பணிகளை நிறுத்திய பொதுமக்கள்

20 ஆண்டுகால கோரிக்கை: தரமற்ற கட்டுமான பணிகளை நிறுத்திய பொதுமக்கள்

webteam

பெரம்பலூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்க தானிய குடோன் கட்டுமான பணிகள் தரமற்றதாக உள்ளது எனக் கூறி பொதுமக்கள் அப்பணியை தடுத்து நிறுத்தினர்.

பெரம்பலூர் அருகே பூலாம்பாடி பகுதி விவசாயிகள் தங்கள் பகுதியில் உற்பத்தி செய்யும் தானியங்களை பாதுகாத்து விற்பனை செய்யும் வகையில் குடோன் அமைத்து தரவேண்டும் என்று 20 ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து தற்போது பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் 75 லட்ச ரூபாய் மதிப்பில் சுமார் 1000 மெட்ரிக் டன் தானியங்களை சேமிக்கும் வகையில் பூலாம்பாடி - அரும்பாவூர் இடையே குடோன் கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கட்டுமானப்பணிகள் தரமற்ற வகையில் நடைபெறுவதாக புகார் தெரிவித்து விவசாயிகள் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்தினர். கட்டுமானப்பொருட்கள் தரமற்றதாகவும், பணிகள் முறையாக இல்லாமல் அவசரகதியில் நடைபெறுவதாகவும் பூலாம்பாடி விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கையால் சுரண்டினாலே பெயர்ந்து விழும் வகையில் கட்டடம் எழுப்பபடுவதால் இந்த குடோன் ஓரிரு வருடங்களிலேயே சேதமடைந்து விடும் என்பது அப்பகுதி விவசாயிகளின் கவலையாக உள்ளது.