தமிழ்நாடு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது

webteam

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை தந்த பொருளாதாரத்துறை பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அக்கல்லூரி மாணவ,மாணவிகளிடம் வகுப்பறையில் பாலியல் சீண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மாணவ ,மாணவிகள் சுமார் 70 பேர் வகுப்பை புறக்கணித்து விட்டு, காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க ஊர்வலமாக சென்றனர். இதனால் கரூர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

(File Photo)

இந்த நிலையில் தகவலறிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமரராஜா அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தார். அப்போது மாணவ, மாணவிகள் கல்லூரியின் பொருளாதாரத் துறைத் தலைவர் இளங்கோவன் வகுப்பறையிலேயே மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாகவும், இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்தனர். 

மேலும் கடந்த 21 ஆம் தேதி கல்லூரி முதல்வரிடம் மனு அளித்த போது உரிய விசாரணை நடத்தப்படும் என்றார். ஆனால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் இன்று கல்லூரிக்கு வருகை தந்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க சென்று கொண்டிருக்கிறோம் என்று மாணவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து “உங்கள் புகாரை என்னிடம் தாருங்கள் நான் உரிய விசாரணை நடத்துகிறேன், தேர்தல் நேரம் என்பதால் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை” என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் குமாரராஜா தெரிவித்தார். பின்னர் மாணவர்களின் மனுக்களை  பெற்ற துணை கண்காணிப்பாளர் மாணவர்களை திருப்பி அனுப்பினார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. இதனைத்தொடர்ந்து 
மாணவர்களின் புகாரின் அடிப்படையில் கரூர் அரசுக் கலை கல்லூரியின் பொருளாதாரத் துறைத் தலைவர் பேராசிரியர் இளங்கோவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.