தருமபுரி மாவட்டத்தில் வறட்சி காரணாமாக சின்ன வெங்காயம் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், மாரண்டஅள்ளி, அதகப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியால் வெங்காயம் வரத்து மற்றும் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலிருந்து வெங்காயம் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் உள்ளூர் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து சரிந்துள்ளது.கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ரூ.20 முதல் 30 வரை விற்பனையானது. ஆனால் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து தற்போது கிலோ ரூ.40 முதல் 50 வரை விற்பனையாகிறது.
தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக விலை உயர்ந்துள்ளது. கடுமையான வறட்சியிலும் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வெங்காயம் விலை உயர்வால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கியும் போதிய வருமானம் கிடைக்கவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இந்த விலையேற்றத்தால், இல்லத்தரசிகள் சின்ன வெங்காயத்திற்கு பதிலாக, பெரிய வெங்காயம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.