காவல்துறையினர் காவல் பணிகள் மட்டுமின்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் அறிவுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் நேற்று இரவு தொடங்கி காலை வரை மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. மேலும் புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மழைக்காலத்தில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் வகையில் பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைநேரத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும்படி காவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் சாலைகளில் விழும் மரங்களை அகற்றும் பணிக்காக 400 சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் காவல் பணிகள் மட்டுன்றி மீட்பு, நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல்ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று நள்ளிரவு 2 மணி வரை போக்குவரத்து பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.