தமிழ்நாடு

மாமல்லபுரம் தனியார் விடுதியில் மதுவிருந்து - இளைஞர்களை கைது செய்து விசாரணை

மாமல்லபுரம் தனியார் விடுதியில் மதுவிருந்து - இளைஞர்களை கைது செய்து விசாரணை

webteam

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சொகுசு விடுதிக்குள் அனுமதியின்றி மதுவிருந்து நடத்தியதாக, 150க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதிகளில் தங்குவதும் வழக்கமே.  இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புலிக்குகை அருகே தனியார் விடுதியில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் தங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து திருவள்ளூர் எஸ்பி பொன்னி தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது விடுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். மேலும் மது விருந்தின் போது விடுதியில் உல்லாசத்தில் ஈடுபட்ட ஏழு பெண்கள் உட்பட 160 பேரை கைது செய்தனர். தொடர்ந்து விடுதியில் இருந்து ஏராளமான மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் ஐ.டி நிறுவன ஊழியர்கள் என்பதும், வார இறுதி நாளை கொண்டாடுவதற்காக மாமல்லபுரம் வந்திருப்பதும் தெரியவந்தது. 

இதனைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்து, போலீசார் வேனில் அழைத்து வந்து மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் சிக்கிய இளைஞர்களின் பெற்றோர்களுக்கு காவல்துறையினரால் தகவல் அளிக்கப்பட்டு, போலீசாரிடம் கடிதம் எழுதி கொடுத்து அவர்களை அழைத்து செல்கின்றனர்.