தமிழ்நாடு

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் : காவல்துறை நிபந்தனை

webteam

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை அடுத்து போராட்டக்காரர்களுக்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள், வணிகர்கள் உள்பட பலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தொடர் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் திட்டத்தை உடனடியாக கைவிடாவிடில், மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயிகள் எச்சரித்தனர். இந்த சூழலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு காவல்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில்,மாலை 5 மணி முதல் 6 வரை மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. மேலும் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடாது என்றும் சரக்கு வாகனங்களில் போராட்டத்துக்கு ஆள்களை அழைத்து வரக்கூடாது என்றும் ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது எனவும் காவல்துறை நிபந்தனைகளை விதித்துள்ளது. இதனையடுத்து காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகளை மீறினால் போராட்டக்காரர்கள் மீதும், ஏற்பாட்டாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.