தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் காவலர்களை கவச உடையில் சென்று நலம் விசாரித்த காவல் ஆணையர்

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் காவலர்களை கவச உடையில் சென்று நலம் விசாரித்த காவல் ஆணையர்

kaleelrahman

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் கவச உடையில் சென்று உடல் நலம் விசாரித்தார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கீழ் சென்னை எழும்பூரில் பயன்பாட்டில் இருந்து வரும் காவலர் மருத்துவமனை தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் உதவியுடன் கடந்த 26.5.2021 முதல் கோவிட் வார்டாக மாற்றம் செய்யப்பட்டு 75 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மிதமான கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் காவலர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை எழும்பூரிலுள்ள காவல் மருத்துவமனைக்கு சென்று கொரோனா கவச உடையணிந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் காவல் துறையினர், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவமைனையின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவ குழுவினரிடம் கேட்டறிந்ததோடு, மருத்துவ பணியாளர்களின் பணியினை பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் கிழக்கு மண்டலம் பாலகிருஷ்ணன், துணை ஆணையர்கள் பகலவன், ஸ்ரீதர், பாபு, சௌந்தரராஜன் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.