கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் கிருஷ்ண பிரசாத் (36). கன்னடம், தமிழ் மற்றும் மலையாள படங்களின் விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளரான உள்ளார். இவருக்கு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கரிகாலன் (45), கார்த்திகேயன் (23) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு கிருஷ்ண பிரசாந்த், கரிகாலன் மற்றும் கார்த்திகேயனிடம் உங்கள் இருவரையும் பாக்யராஜ் மகனாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என ஆசை வார்த்தை கூறி ரூ.2.50 இலட்சம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பணத்தை வாங்கிய கிருஷ்ணபிரசாந்த் இவர்கள் இருவருக்கும் நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் கிருஷ்ண பிரசாந்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். பணம் தராமல் கிருஷ்ண பிரசாந்த் இவர்கள் இருவரையும் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஆம்னி காரில் சென்ற கரிகாலன், கார்த்திகேயன் மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சக்திவேல் (31) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கிருஷ்ண பிரசாந்தை காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இது குறித்து தகவல் சத்தியமங்கலம் போலீசாருக்கு கிடைத்த நிலையில், சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை வாரச்சந்தை பஸ் ஸ்டாப் அருகே இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே தயாரிப்பாளரை கடத்தி வந்த காரை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.