திருச்சியில் சந்தேகத்தின் பேரில் நரிக்குறவ பெண்கள் 7 பேரை கைது செய்து விடிய விடிய அடித்து துன்புறுத்தியதாக காவல்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த ஜெம்புநாதபுரத்தில் கூடை பின்னும் குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேர ரோந்து பணியின் போது சந்தேகத்தின் பேரில் சங்கீதா, ஜீவா, வள்ளி, சித்ரா, ஜெயக்கொடி, திவ்யா, சினோகா ஆகிய 7 பெண்களை நள்ளிரவில் முசிறி காவல்துறை ஆய்வாளர் ஜெயசித்ரா விசாரணைக்கு அழைத்து சென்றார்.
அப்போது அவர்களை தகாத வார்த்தையில் பேசியதாகத் தெரிகிறது. மேலும் அவர்களை அடித்து உதைத்ததால் காயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே தற்போது துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.“நாங்கள் நள்ளிரவில் தூங்கிக் கொண்டு இருந்தபோது ஆய்வாளர் மற்றும் போலீசார் அடித்து மொத்தம் 7 பேரை அழைத்து சென்றனர். முசிறி காவல்நிலையத்தில் 1 நாள் முழுவதும் வைத்து தகாத வார்த்தைகளில் பேசி பூட்ஸ் காலால் எட்டி உதைத்து அடித்தனர்.
நாங்கள் எந்தவித குற்றமும் செய்யவில்லை. எதற்காக எங்களை அழைத்துசென்று அடித்து துன்புறுத்த வேண்டும். பாமர மக்கள் மீது போலீசார்கள் இப்படி நடந்துக் கொள்வது எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது” எனக் கூறுகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட போலீசார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொடூரமாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.