தமிழ்நாடு

"ட்ரோன் கேமரா பயன்படுத்த அனுமதி அவசியம்" - செய்ய வேண்டியவை என்ன‌?

"ட்ரோன் கேமரா பயன்படுத்த அனுமதி அவசியம்" - செய்ய வேண்டியவை என்ன‌?

webteam

முறையான அனுமதி பெற்று தான் ட்ரோன் கேமராக்களை இனி இயக்க வேண்டும் என்ற மத்திய விமான போக்குவரத்து துறையின் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை சில விதிகளை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து விதிகளில் கூறப்பட்டிருப்பதாவது: ட்ரோன்களுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். அது விமானத்தில் ஒட்டப்பட்டிருக்கும்.

விமானத்தை இயக்குபவர் ஆளில்லா விமான ஆப்ரேட்டர் அனுமதி சான்று பெற்றிருக்க வேண்டும். ட்ரோன்களின் எடையை கொண்டு நேனோ, மேக்ரோ, மீடியம், சிறியது, பெரியது என 5 வகைகளாக பிரிக்கப்படும்.

நேனோ ட்ரோன்களை தவிர மற்றவற்றை பறக்க வைக்க விமான போக்குவரத்து துறையின் முன் அனுமதி பெற வேண்டும். 200 அடிக்கு கீழ் மைக்ரோ ட்ரோன்களை பறக்க செய்யும் முன்பு உள்ளூர் காவல்துறையிடம் 24 மணிநேரத்துக்கு முன்பு அனுமதி பெறுவது அவசியம்.

அரசுக்கு சொந்தமான ட்ரோன்களை இ‌யக்குவதற்கு முன்பு உள்ளூர் காவல்துறையிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவருக்கு தான் ட்ரோனை இய‌க்க அனுமதி அளிக்கப்படும்.

10ஆம் வகுப்பில் ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்று, DGCA விதிகள் படி பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட ஆவணங்களை சமர்ப்பித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும். 

5 ஆண்டுகளுக்கு இந்த உரிமம் செல்லும். பகல் வேளையில் மட்டுமே ட்ரோன்களை இயக்க முடியும். காப்பீடு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ஒருவர் ஒரு ட்ரோனுக்கு மேல் அதிகமாக இயக்க அனுமதிக்கப்படாது. பெருநகர விமான நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மற்ற விமான நிலையங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும் ட்ரோனை இயக்க அனுமதி கிடையாது. 
சர்வதேச எல்லை பகுதி, கடல் கரையில் இருந்து 500 மீட்டரை தாண்டி ட்ரோனை இயக்க முடியாது. நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லியின் விஜய் சவுக் பகுதி, தலைமை செயலகங்கள், தேசிய பூங்காங்கள், வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட சுற்றளவுக்குள் ட்ரோன்களை இயக்க முடியாது.