தமிழ்நாடு

திருப்பத்தூர்:சாலை வசதியின்றி கால்கடுக்க நடக்கும் மலைக்கிராம மக்கள்.. கோரிக்கை நிறைவேறுமா?

திருப்பத்தூர்:சாலை வசதியின்றி கால்கடுக்க நடக்கும் மலைக்கிராம மக்கள்.. கோரிக்கை நிறைவேறுமா?

JustinDurai

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் தரைகாடு மலைக்கிராம மக்கள். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூருக்கு அடுத்து உள்ளது தரைக்காடு. ஆந்திர மாநிலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மலைக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 300 பேர் வசித்து வருகின்றனர். இங்கு  1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தினந்தோறும் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயணித்து பள்ளிக்குச் செல்கின்றனர். காலை 6 மணிக்கு தரைக்காட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பும்  மாணவர்கள், பள்ளிக்கு வந்தடைவதற்கு 10 மணி ஆகி விடுவதாக அப்பகுதி பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.

தங்கள் பிள்ளைகள் இதுபோல் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கிராம மக்களே ஒரு குடும்பத்திற்கு 2,000 ரூபாய் வீதம் வசூல் செய்து, 100க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த பொதுமக்கள் உதவியுடன் மண் சாலை அமைத்து உள்ளனர். இருந்தபோதும் மழை வந்தால் அந்த மண் சாலையும் அடித்து சென்று விடுகிறது என்று மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர் அக்கிராம மக்கள். இதனால் மாணவர்கள்  உடல் நலம் பாதிக்கப்பட்டு பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. கிராமத்தில் உள்ளவர்கள் திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டாலோ அல்லது முதியவர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டாலும் அவர்களை முதுகில் சுமந்து கொண்டும் தூக்கி கொண்டும் சென்று வாணியம்பாடி மருத்துவமனையில் அனுமதிப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் ரேஷன் பொருட்கள்  வாங்குவதற்காக காலையில் கிராமத்திலிருந்து வரும் மக்கள் பொருட்களை வாங்கி கொண்டு தரைக்காடு கிராமத்திற்கு செல்வதற்குள் மாலை ஆகி விடுவதாகவும், பொருட்களை வாங்குவதற்காக நாள் முழுவதும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம் என்று தெரிவிக்கின்றனர். மின் இணைப்பு  இருந்தும் மிக்ஸி, மின்விசிறி போன்ற எந்த ஒரு மின் சாதன பொருட்களும் பயன்படுத்த முடியவில்லை. குடிநீருக்காக தினந்தோறும் மலையடிவாரம் உள்ள காட்டில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மற்றும் கிணறு சரிவர பராமரிக்கப்படாததால் குடிநீருக்காக மலை கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், வட்டார அலுவலர், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்து ஏமாந்து போனதுதான் மிச்சம் என வேதனை தெரிவிக்கின்றனர் தரைகாடு மலைக்கிராம மக்கள்.  இக்கிராமத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார் சாலையை அமைத்து கொடுத்தால், தங்கள் துயரம் துடைக்கப்பட்டு கிராமத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதே இக்கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.