பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவியர் கழிவு நீர் சூழ்ந்திருக்கும் சாலையை கடந்துசெல்ல முடியாமல் தவிக்கின்றனர். குழந்தைகள், பெரியவர்களுக்கு தோல் நோய் தொற்றும் இதனால் ஏற்படுகிறது. உடனடியாக இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் என நெல்லை டவுண் சுந்தரர் தெரு மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்த செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்.
நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகள் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாளசாக்கடை திட்டம், குடிநீர் திட்டம் உட்பட பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பான்மையான குடியிருப்பு பகுதிகளில் தோண்டப்பட்டு சாலைகளில் பணிகள் முடிவடையாமல் நீண்ட நாட்களாக அதே நிலை நிலவுவதால் பல்வேறு பிரச்னைகளை அப்பகுதி மக்கள் சந்திக்கின்றனர்.
குறிப்பாக நெல்லை மாநகராட்சி 28 வது வார்டுக்கு உட்பட்ட டவுண் சுந்தரர் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால் தெருவுக்குள் நுழைய முடியாதபடி கழிவுநீர் ஓடை சாலை முழுவதும் சூழ்ந்து குடியிருப்புப் பகுதிக்கு செல்லமுடியாத நிலை கடந்த ஆறு மாத காலமாக இருக்கிறது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
கழிவுநீர் சேர்ந்திருக்கும் சாலையால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன எனவும், அவை குணமாக நீண்ட நாட்கள் ஆகின்ற எனவும் கூறப்படுகிறது. மேலும் மாற்று வழியில் சுற்றி செல்லும்பொழுது நேரத் தாமதம் ஆகிறது. இந்த சூழ்நிலையைத் தொடர்ந்து அனுபவித்து வருவதாகவும், இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதற்கான பதில் கிடைக்காமல் உள்ளது எனவும் இந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் வாழவா சாகவா என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மௌனம் காப்பது மேலும் தங்களை வேதனடைய செய்கிறது எனவும் இப்பகுதி மக்கள் மிகவும் வேதனையுடன் கூறுகின்றர்.
இதைத் தொடர்ந்து நெல்லை டவுன் பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த செய்தி அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் லாரி மூலம் இந்த கழிவுநீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும் எனக் கூறி அதற்கான நடவடிக்கையும் எடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பைப் மூலம் கழிவுநீர் அகற்றப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டு மாற்று பகுதிக்கு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.