திருமாவளவன் ஒருங்கிணைப்பாளராக இருந்த இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பு 1991-ம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளாக மாற்றம் பெறுகிறது. எட்டு ஆண்டுகளில் தேர்தல் அரசியல் களத்தில் இருந்து விலகியிருந்த திருமாவை, அப்போதைய தமாகா தலைவரும் மூத்த தலைவருமான மூப்பனார் தேர்தல் அரசியல் களத்துக்கு அழைத்து வந்தார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் தமாகாவுடன் கூட்டணி அமைத்து முதன்முதலாக தேர்தலில் களமிறங்கியது விசிக. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
தொடர்ந்து, 2004 தேர்தலில், ஐக்கிய தனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அதே சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் வாக்குகள் பெற்று அசத்தினார். தொடந்து, 2001 சட்டமன்றத் தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்தது விசிக.
மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்று சட்டமன்றம் சென்றார். ஆனால், தி.மு.கவுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாக, 2004-ல் தன் பதவியை ராஜினாமா செய்தார்.
முதல் தேர்தலைத் தவிர்த்து, அனைத்துத் தேர்தல்களிலும் தனிச்சின்னத்திலேயே போட்டியிட்டது விசிக.
2006 தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒன்பது தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அப்போதும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிட்டது விசிக. ஆனால், அப்போது இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
தொடர்ந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் மட்டும் வெற்றிபெற்று முதன்முறையாக நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார்.
தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில், பத்து தொகுதியில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட விசிகவால் வெற்றிபெற முடியவில்லை. 2014 தேர்தலிலும் அதே கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு, இரண்டிலுமே தோல்வியைத் தழுவியது.
தொடர்ந்து 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. காட்டுமன்னார் கோவிலில் போட்டியிட்ட கட்சியின் தலைவர் திருமாவளவன் 87 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.
தொடர்ந்து மூன்று தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்து வந்த விசிகவுக்கு ஆசுவாசமாக அமைந்தது 2019 நாடாளுமன்றத் தேர்தல். விழுப்புரம், சிதம்பரம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. விழுப்புரத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்திலும், சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவன் பானைச் சின்னத்திலும் போட்டியிட்டனர். பல்வேறு இழுபறிக்குப் பின்னர் நள்ளிரவில் திருமாவளவனின் வெற்றி உறுதியானது. கட்சி கடந்து, சாதி கடந்து பலதரப்பட்ட மக்களும் அந்த வெற்றியைக் கொண்டாடினர் என்றால் மிகையில்லை.
தொடர்ந்து, 2021 தேர்தல். விடுதலைச் சிறுத்தைகள் தேர்தல் அரசியல் வரலாற்றிலேயே மகுடம் சூட்டிய தேர்தல் என்று சொல்லலாம்.
தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கடந்த காலங்களில் இரட்டை இலக்கங்களில் போட்டியிட்டுவிட்டு தற்போது ஆறு தொகுதிகளுக்கு திருமாவளவன் ஒப்புக்கொண்டபோது, அவரின் ஆதரவாளர்களே அதிர்ச்சிக்குள்ளாயினர். ‘‘ஆறு சீட்டுகளுக்கு கட்சியை தி.மு.க-விடம் திருமாவளவன் அடமானம் வைத்துவிட்டார்’’ என்று விமர்சனங்கள் எழுந்தன. அப்படிக் கடுமையாக உதிர்த்த வார்த்தைகளையெல்லாம் நிதானமாகவும் பொறுமையாகவும் கையாண்டார் திருமாவளவன்.
தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு செய்யூர், வானூர், திருப்போரூர், அரக்கோணம், காட்டுமன்னார்கோவில், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாறு தி.மு.க தரப்பிலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டது. அது நல்ல யோசனையாக இருந்தாலும், தன் கட்சியின் நலனையும் யோசிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டார் திருமாவளவன்.
தன் கட்சியின் சுயத்தை நிரூபிப்பதற்காக, தனிச் சின்னத்தில் போட்டியிடும் துணிச்சலான முடிவை எடுத்து அதில் வெற்றியும் கண்டார். நான்கு தொகுதிகளில் தனிச்சின்னத்தில் வெற்றிபெற்றது விசிக. அதில், இரண்டு பொதுத்தொகுதிகள் என்பது அதுவரை விசிக மீது கட்டமைக்கப்பட்டு வந்த பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தது.
2024 தேர்தல், விடுதலைச் சிறுத்தைகளின் மணி மகுடத்தில் மாணிக்கக் கல் பதித்த தேர்தல் என்றே சொல்லலாம்.
இரண்டு தனித்தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என மூன்று தொகுதிகளுக்காக திமுக தலைமையிடம் மல்லுக் கட்டினார் திருமாவளவன். தொடர்ந்து பேச்சுவார்த்தை இழுபறியாக எதிர்முகாமில் இருந்தெல்லாம் அவருக்கு அழைப்பு வந்தது.
ஆனால், கடும் நெருக்கடியான அந்தச் சூழலை மிக நிதானமாகக் கையாண்ட திருமாவளவன், திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோதும் அதைப் பொறுமையாக ஏற்றுக்கொண்டார். சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதியிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக, இரண்டிலுமே வெற்றிபெற்றதோடு அங்கீகாரம் பெற்ற கட்சியாகவும் மாறி வரலாற்றில் தங்கள் பெயரை பொறித்துள்ளது.
கரடுமுரடான அரசியல் களத்தில் கால்பதித்து பின்னர் தேர்தல் களத்துக்கு வந்த பின்னும் கடுமையான சவால்களை எதிர்கொண்ட கட்சி விசிக. தற்போது நான்கு எம்.எல்.ஏக்கள், இரண்டு எம்.பிக்களைப் பெற்று அடுத்தடுத்த சாதனைகளைப் படைத்து பயணைத்தைத் தொடர்கிறது. கிடைத்திருக்கும் அரசியல் அங்கீகாரத்தின் மூலம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகால சிறுத்தைகளின் கனவு நனவாகியிருக்கிறது என்றால் அது மிகையில்லை