தமிழ்நாடு

2ஜி வழக்கு கடந்து வந்த பாதை

2ஜி வழக்கு கடந்து வந்த பாதை

webteam

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதியை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில் 2ஜி விவகாரத்தில் நடைபெற்ற முக்கிய திருப்பங்களை காணலாம்.

ஆகஸ்ட் 2007ல் 2ஜி அலைவரிசை ஏல நடைமுறையை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தொடங்கியது. ஏல நடைமுறை சரியானதாக இல்லை எனக் கூறி 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு நிதியமைச்சகம் கடிதம் எழுதியது. 2010ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுமொத்த ஏல நடைமுறையும் நியாயமற்றதாகவும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 2ஜி ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2010 நவம்பர் 10ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் அமைச்சர் ராசா தன் பதவியை நவம்பர் 14ஆம் தேதி ராஜினாமா செய்தார். 2011 பிப்ரவரி 17ஆம் தேதி ராசா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி ராசா உள்ளிட்ட 9 பேர் மீது சிபிஐ தனது முதல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கலான 2வது குற்றப்பத்திரிகையில் கனிமொழி உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் இடம் பெற்றன. ராசா அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட 122 தொலைத்தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் 2012 பிப்ரவரி 2ஆம் தேதி ரத்து செய்தது. இந்நிலையில் மே 15ஆம் தேதி ராசா ஜாமீனில் வெளியே வந்தார். 2014 ஏப்ரலில் 2ஜி ஊழல் வழக்கில் ராசா, கனிமொழி மீது அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் 2017 ஏப்ரல் 19ஆம் தேதி நிறைவுற்றது. தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தீர்ப்பின் தேதியை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. இவ்வழக்கில் வரும் அக்டோபர் 25ஆம் தேதி அல்லது அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி. சைனி அறிவித்துள்ளார்.