திருப்பூர் அருகே 10ம் வகுப்பு மாணவி பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவியின் பெற்றோர் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்த நவ்யா என்ற மாணவி, கடந்த 9ம் தேதி கணினி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தங்களது அனுமதியின்றி பிரேத பரிசோதனை மேற்கொண்டதாக மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்நிலையில், அந்த மாணவியின் பெற்றோர் மரணம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்த போது, ‘மற்றொரு மாணவியின் பையில் இருந்து கேக் எடுத்து சாப்பிட்டதாகவும் அதனை கண்டித்ததால் தூக்கிட்டதாகவும்’ கூறியுள்ளனர். மற்றொருவரிடம் விசாரித்ததில் மாணவியின் பள்ளி பையில் காதல் கடிதம் இருந்ததாகவும் அதனை விசாரித்ததில் தூக்கிட்டதாகவும் கூறுகின்றனர். மேலும் சிலர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாகவும் கூறுகின்றனர்.
எனவே, மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகத்தினர் தனது மகளை கொலை செயது விட்டதாகவும் இந்த வழக்கு விசாரணையை முறையாக மேற்கொள்ள வேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன அளித்துள்ளனர்.