தமிழ்நாடு

வாடகைக் கேட்டு உடைமைகளை வெளியே வீசிய உரிமையாளர் - பரிதவிக்கும் தொழிலாளி

வாடகைக் கேட்டு உடைமைகளை வெளியே வீசிய உரிமையாளர் - பரிதவிக்கும் தொழிலாளி

PT

வாடகை கேட்டுக் கொடுமைப்படுத்தியவர் மீது புகார் அளிக்க வந்த தொழிலாளியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி மறுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவருக்குப் பெருமாள் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இவர் இருசக்கர வாகனங்களைத் தூய்மைப்படுத்தும் கடையில் உதவியாளராகப் பணி புரிந்து வந்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அவரது தொழில் முடங்கியது. இதனால் இவர் வீட்டு வாடகைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் வாடகைப் பணம் கேட்டு தொந்தரவு செய்ததோடு மட்டுமல்லாமல் வீட்டிலிருந்த பொருட்களையும் வெளியே வீசி எறிந்ததாகச் சொல்லப்படுகிறது.இது குறித்துச் செய்வதறியாத தங்கப்பாண்டி திடீர் நகர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவலர்களும் தங்கப்பாண்டியின் வீட்டு உரிமையாளருக்கு உதவியாக இருந்து கொண்டு தங்கப்பாண்டியை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து இந்தச் சம்பவத்தை மதுரை காவல் ஆணையரிடம், அவரின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த மணிகண்டன் என்ற காவலர் இவரை அடித்து விரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் வேதனை அடைந்த தங்கப்பாண்டி இறுதியாக மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். ஆனால் அங்கும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.


இது குறித்துத் தங்கப்பாண்டி கூறும் போது “இரவில் வீட்டில் இருப்பதற்கே பயமாக இருக்கிறது. இந்த கொரோனா பிரச்சனைகள் முடிந்த பின்னர் நானே வீட்டை காலி செய்து விடுகிறேன்” எனக் கண்ணீருடன் கூறினார்.