தமிழ்நாடு

“அஜித் படத்திற்கு பாட்டு எழுத ஆசை” - பெண் ஆட்டோ ஓட்டுனர் சரோஜா

“அஜித் படத்திற்கு பாட்டு எழுத ஆசை” - பெண் ஆட்டோ ஓட்டுனர் சரோஜா

webteam

ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வரும் சரோஜா, அஜித் படத்தில் தனது முதல் பாடலை எழுத வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உறவுகள் பல இருந்தும் தன் உழைப்பால் மட்டுமே உயர வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருபவர் புதுக்கோட்டையை சேர்ந்த சரோஜா. இவர் நடிகர் அஜித் படத்தில் தனது முதல் பாடலை பாட வேண்டும் என்றும் அதுவே வாழ்நாள் லட்சியம் என்றும் கூறியுள்ளார். அந்த வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் தன்னைப் போலவே நடிகர் அஜித்தும் உழைப்பை நம்பி உயரத்திற்கு வந்தவர் என்று விளக்கமும் அளித்துள்ளார் சரோஜா. 

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்தவர் சரோஜா. 47 வயதாகும் சரோஜா கடந்த 27 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார். தமிழகத்தின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனர் சரோஜாதான். இவருக்கு அண்ணன், தங்கை, அக்கா என்று பல உறவுகள் இருந்தும் உழைப்பால் மட்டுமே வாழ வேண்டும் என்று உறுதியான எண்ணத்துடன் ஆட்டோ ஓட்டுவதில் கிடைக்கும் வருமானத்தில் தன்னம்பிக்கையோடு தனித்தே வாழ்ந்து வருகிறார் சரோஜா.

இந்நிலையில் “நடிகர் அஜித்தின் படத்தில் தனது முதல் பாடலை எழுத வேண்டும்” என்று ஆசைப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ஆட்டோ ஓட்டுனர் சரோஜா  தெரிவித்த கருத்து வைரலாக பரவியது. இதனை பார்த்த அஜித் ரசிகர்கள், அவருக்கு ஆதரவு அளிக்க தொடங்கியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து எதற்காக தனக்கு இந்த ஆசை வந்தது என்று சரோஜா விளக்கம் அளித்துள்ளார்.  வறுமையில் பிறந்தாலும் உழைப்பால் வாழவேண்டும் என்ற எண்ணம் எம்ஜிஆர் பாடல்கள் கேட்டதால் தனக்கு ஏற்பட்டது. அதனாலேயே ஆட்டோ ஓட்ட முடிவெடுத்து 1991ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் உதவியால் ஆட்டோ வாங்கி ஓட்டி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தமது உறவுகள் உட்பட சொந்தங்கள் பல உதவ முன்வந்தும் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டு சொந்த உழைப்பில் வாழ்வதையே பெருமையாகக் கருதி வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

அதுபோல் எந்தவித பின்புலமும் இன்றி சொந்த உழைப்பில், நடிப்பால் உயர்ந்த அஜித்தின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு பாடம் என்று கூறுகிறார். இதனாலேயே அஜித்தை தனக்குப் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இவர் கவிதை புத்தகம் வெளியிட்ட நிலையில் அவரின் (அஜித்) ஒரு படத்திற்கு ஓபனிங் சாங் எழுத வேண்டும் என்பதே தனது நீண்ட நாள் நிறைவேறாத ஆசையாக உள்ளது என்று ஏக்கத்தோடு கூறுகிறார் சரோஜா. 

அதுமட்டுமின்றி கவிதை மீது தமக்குள்ள ஆர்வத்தால் ஏற்கனவே பல கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளதாகவும் சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்ற குறிக்கோளோடு ஆட்டோவிலேயே சென்னை சென்று வாய்ப்புகள் கிடைக்காமல் மீண்டு புதுக்கோட்டைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

தான் தனிமையில் வாழ்வதால் சில நேரங்களில் உரிமையை உணர்ந்தாலும் தன்னைச் சுற்றி எப்போதும் இருக்கும் நன்றியுள்ள ஜீவன், நாய்களும், தன் வருகைக்காக காத்திருக்கும் மாடுகளும்தான் என்கிறார் சரோஜா. தான் சம்பாதிக்கும் சொற்ப வருமானத்தில் தனது உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்வதோடு, அந்த வாயில்லா ஜீவன்களுக்கு கடந்த 27 ஆண்டுகளாக உணவளித்த பராமரித்து வருவதாக கூறுகிறார் சரோஜா.