தமிழ்நாடு

வெற்றி, தோல்வியை நிர்ணயித்த ஒரே ஒரு வாக்கு - இது ஊரக உள்ளாட்சி தேர்தல் சுவாரஸ்யம்!

கலிலுல்லா

ஒரு வாக்கு எத்தனை முக்கியத்துவமானது என்பதை நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் நிரூபித்திருக்கிறது. 

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 140 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில், திமுக கூட்டணி 85 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளை, திமுக கூட்டணி கைப்பற்றும் நிலையில் உள்ளது. மொத்தமுள்ள 1,381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் இடங்களில் திமுக 298 இடங்களிலும், அதிமுக கூட்டணி 43 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாமக 10 இடத்திலும், அமமுக மற்றும் தேமுதிக தலா ஓர் இடத்திலும், சுயேச்சை உள்ளிட்ட பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதனிடையே ஒற்றை வாக்கு என்பது எத்தனை வித்தியாசங்களை உண்டு பண்ணும் என்பதை நிரூபிக்கும்வகையிலான சம்பவங்கள் இன்றைய வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவந்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கோவையில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்தவர் ஒரே ஒரு வாக்கு மட்டும் பெற்று தோல்வியடைந்தார். குருடம்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக், அங்கு ஒரு வாக்கு மட்டும் பெற்றுள்ளார். அவரது குடும்பத்தினரே அவருக்கு வாக்களிக்கவில்லை என செய்திகள் பரவிய நிலையில், கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு 4ஆவது வார்டில் வாக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வார்டில் 910 வாக்குகள் பதிவான நிலையில், அதே வார்டில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் ரவிக்குமார் 2 வாக்குகள் மட்டும் பெற்றார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தலைவராக இருந்த ரமேஷ்குமார் உயிரிழக்க, சிறுமருதூர் ஊராட்சிக்கு நடந்த இடைத்தேர்தலில், கடல்மணி 424 வாக்குகள் பெற்றார். அவருக்கும், அடுத்த இடத்தில் உள்ளவருக்கும் ஒரு வாக்கு மட்டுமே வித்தியாசம்.

ஒற்றை வாக்கும் முக்கியமாக கருதப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஒன்றியத்தில் 310 தபால் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. மொத்தம் 371 தபால் வாக்குகள் இருந்த நிலையில் அதில் 341 வாக்குகள் மட்டுமே பதிவாகின. அவற்றில் 310 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. காரணம் ஒவ்வொரு தபால் ஒட்டு கவரிலும், வாக்குச்சீட்டுகளுடன் உறுதிமொழி பத்திரம் ஒன்றும் தரப்படும். வாக்களித்த சீட்டுகளை ஒரு கவரில் வைத்து அந்தக் கவருக்கு மேல் உறுதிமொழிப் பத்திரத்தை வைத்தால்தான் கவரை பிரிப்பார்கள். மாறாக, உறுதிமொழிப் பத்திரத்தை கவருக்குள்ளேயே வைத்து விட்டதால், 310 தபால் வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன.