நாமக்கல் அருகே தெருவில் கிடந்த பணப்பையை முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததால் அதிலிருந்த பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள துட்டி பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது தந்தை உயிரிழந்ததை தொடர்ந்து உறவினர்களுக்கு சீர் செய்ய பொருட்களை வாங்குவதற்காக திருச்செங்கோடு சென்றிருந்தார். துணி கடைகளிலும் பாத்திர கடைகளிலும் பொருட்களை வாங்கிக்கொண்டு பைகளை எடுத்துச் சென்றபோது திருச்செங்கோடு கிழக்கு மாட வீதி பகுதியில் ஒரு பை மட்டும் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் இருந்த லாண்டரி தொழிலாளி பழனியப்பன் என்பவர் அந்த பணப்பையை எடுத்து காவல்துறையில் தனக்கு தெரிந்த காவல் நண்பரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து காவல் நண்பரான பாஸ்கர மோகன் அந்த பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த கைப்பையில் துணிக் கடையில் வாங்கிய துணிகளும் பணம் 23,880 ரூபாயும் இருந்தது.
இதனையடுத்து துணிக்கடை பில்லை வைத்து விசாரித்தபோது தங்களது கைப்பை துணிக்கடையில் தொலைந்து போய் இருக்குமோ என செல்வகுமார் துணிக்கடைக்கு வந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து துணிகள் மற்றும் பணத்துடன் கூடிய பையை தவறவிட்ட செல்வகுமார்- சத்யா தம்பதியிடம் காவல்துறை உதவி ஆய்வாளர் மலர்விழி ஒப்படைத்தார். தவறவிட்ட பணப்பையை எடுத்துக் கொடுத்த பழனியப்பனுக்கு காவல்துறையினர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.