தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட போராட்டம் - ஜாக்டோ-ஜியோ

நீதிமன்ற உத்தரவை பொறுத்து அடுத்தக்கட்ட போராட்டம் - ஜாக்டோ-ஜியோ

rajakannan

வேலை நிறுத்தம் தொடர்பான ‌வழக்கில் வரும் 21ஆம் தேதி நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்க உள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். 

சிபிஎஸ் கிட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதியபென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய ஊதிய குழு அமைக்க வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடந்த 15ம் தேதி வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மதுரை உயர் நீதிமன்ற கிளை போராட்டத்திற்கு இடைகால தடை விதித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வருவாய் சங்க அலுவலக கட்டிடத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய நிர்வாகிகள், தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் நீதிமன்ற உத்தரவிற்கு பின்னர் மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர் மட்ட குழு கூடி அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கும் என்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை ஜாக்டோஜியோ போராட்டத்திற்கு வந்து கலந்து கொண்டு வீடு திரும்பும் போது விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.