தமிழ்நாடு

”அடுத்த 11 நாட்கள் போர்க்களம்போல் இருக்கும்”- வேட்பாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை

”அடுத்த 11 நாட்கள் போர்க்களம்போல் இருக்கும்”- வேட்பாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை

நிவேதா ஜெகராஜா

”கடந்த எட்டு மாதத்தில் திமுக சம்பாதித்த கெட்ட பெயரை, கடந்த 80 ஆண்டுகளில் எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. அடுத்த 11 நாட்கள் போர்க்களம்போல் இருக்கும்” என பாஜக வேட்பாளர்கள் அறிமுக கட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சி போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மதுரவாயல் அடுத்த வானகரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, லோகநாதன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அண்ணாமலை பேசுகையில், “பாஜக குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாகும். அடுத்த பதினொரு நாட்கள் போர்க்களம்போல் இருக்கும். அந்த அளவுக்கு போர்க்களத்தில் இருப்பதுபோல் முழுமூச்சாக பணியாற்ற வேண்டும்.

கொரோனா காலத்தில் நாம் அதிகமாக மக்களுக்கு செய்துள்ளோம். நம்மைப்போல் எந்தக் கட்சியும் வேலை செய்யவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 450 பேருக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களும் தலைவர்களும் உயிரிழந்துள்ளனர் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

இம்முறை நகராட்சி தேர்தலில் பாஜகவில் மிகத் திறமையானவர்களை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சி பாஜக. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் கிறிஸ்தவர், முஸ்லிம்கள் மதங்களைச் சேர்ந்தவர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜக, மக்களை நேசிக்கும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

பாஜக சார்பில் போட்டியிட கட்சிக்குள்ளேயும் கடுமையான போட்டி இருந்தது. அடுத்த 11 நாட்கள் சென்னை தாம்பரம் ஆவடி மாநகராட்சியில் நிறையபேர் வெற்றி பெறுவார்கள். மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள். புதியவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே பாஜகவின் வெற்றி உறுதி. வேட்பாளர்களிடம் நான் சொல்லவிரும்பும் சில விஷயங்கள் - `களத்துக்கு செல்லும்போது நமக்கு வரவேற்பு தயாராக உள்ளது. இன்றைய சூழலில் செல்போன் பவர்ஃபுல்லான கருவி. அதனை முழுமையாக பயன்படுத்துங்கள். போன் மூலம் வாக்காளரிடம் பேசுங்கள். நீங்கள் செய்துள்ள பணிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேருங்கள். பாஜகவின் செயல்பாடுகளையும், மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுங்கள்.

திமுகவில் வாரிசுகளுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. திமுகவின் குடும்பக் ஆட்சி, கிராமம் முதல் கோபாலபுரம் வரை தொடர்கிறது. நமது கட்சி அப்படியல்ல. நம் கட்சியின் முக்கியமான மூன்று நோக்கங்கள் - `கட்சியை வளர்க்க வேண்டும், மக்கள் அளிக்கும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும், நீங்கள் வெற்றி பெற வேண்டும்’. எப்போதும் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அரசு எந்திரத்தை வைத்து நமது வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை நிராகரிக்க முயற்சித்தார்கள். அதை மீறி வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது, இதுவே நமக்கு கிடைத்த முதல் வெற்றி. என்றாவது ஒரு நாள் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். அதற்கு நாம் பல விஷயங்களை இழப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அது பொருளாகவோ, நேரமாகவோ, நிம்மதியாகவோ கூட இருக்கலாம்.

வேட்பாளராக இருக்கும் நீங்கள், கட்சி தொண்டர்களின் பிம்பமாக இருக்கிறீர்கள்; கட்சியின் ஆன்மாவின் பிம்பமாக இருக்கிறீர்கள். தமிழகத்தில் ஒரு போலியான அரசியலை கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கட்சி புதுவிதமான அரசியலை கையில் எடுத்துள்ளது. அதற்கு மக்களிடம் வரவேற்பு உள்ளது. எட்டு மாதத்தில் திமுக சம்பாதித்த கெட்ட பெயர் 80 ஆண்டுகளுக்கு எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. மக்கள் நமக்கு ஓட்டுப் போட தயாராக இருக்கிறார்கள். ஓட்டு எந்திரத்திற்கும் மக்களுக்கும் இணைப்புப் பாலமாக நீங்கள் இருங்கள். தமிழகத்தில் மிகப் பெரிய மாற்று சக்தி நாம்தான். முழுமையாக அர்ப்பணிப்புடன் பதினொரு நாட்கள் உழைக்க வேண்டும்” அவர் பேசினார்.