தமிழ்நாடு ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பியனுப்பியது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் இன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது நிறைவு பெற்றுள்ளது.
இதன்முடிவில், மீண்டுமொரு முறை நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா, மீண்டும் இன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சபாநாயகர் அமர்வு கூறியுள்ளார். அரசு அனுப்பும் ஒரு மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியது இதுவே முதன்முறை எனக்கூறப்படும் நிலையில், அதை மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்புவதும் இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையில் தொடர் காரசார விவாதத்துக்கு பின்னரே இன்று மசோதா நிறைவேறியது. மசோதா நிறைவேறியபோது, `நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரின் கருத்து ஏற்புடையதல்ல’ என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். பேரவை விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின், “நீட் தேர்வு என்பது மாணவர்களை கொல்லக்கூடிய பலிபீடமாக உள்ளது” எனக் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி: "நீட் தேர்வு அல்ல; பலிபீடம்" - முதல்வர் ஸ்டாலின்