தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்

webteam

ஸ்டெர்லைட் வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ள ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை சேப்பாக்கம் கலச மஹாலில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் கருத்துக் கேட்பு கூட்டத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில், மத்திய சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் சேகர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கின் எதிர்மனுதாரர்கள், இடையிட்டு மனுதாரர்கள் அனைவரும் நேரில் ஆஜராகி, ஆவணங்களை அளித்து, தங்களது தரப்பு கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மதிமுக பொதுச்செயலர் வைகோ, ஸ்டெர்லைட் ஆலையின் துணைத் தலைவர் சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் குழு அமைத்தும், இந்த குழு 6 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.