செய்தியாளர்: பாலகிருஷ்ணன்
தமிழக கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த மாத இறுதிக்குள் பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில், தற்போது அணைக்கான நீர்வரத்து 100 கன அடிக்கும் கீழ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நீர்மட்டம் 51 அடியாக சரிந்துள்ள நிலையில், அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடி பரிசல் துறை பகுதி வறண்ட பாலைவனம் போல் காட்சியளித்தாலும் ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரமும் நந்தி சிலையும் முழுமையாக வெளியே தெரிவதால் ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
மன்னர் காலத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரமும் முன் மண்டபத்தின் மேல் அமைக்கப்பட்ட நந்தி சிலையும் நீர்மட்டம் 65 அடியாக குறையும்போது, கம்பீரமாக தலை காட்டும் நந்தி சிலையும் தற்போது நீர்மட்டம் 51 அடியாக சரிந்துள்ளதால் முழுமையாக வெளியே காட்சியளிக்கிறது.
கட்டடக் கலைக்கு உதாரணமாக 90 ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கியும் நீர்மட்டம் குறையும்போது, வெயிலில் காய்ந்தும் இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரம் நந்தி சிலையை காண சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் பரிசல் மூலம் பயணித்து வழிபட்டு வருகின்றனர்.
கட்டடக் கலைக்குச் சான்றாக இருக்கும் ஜெகதீஸ்வரர் ஆலய கர்ப்பகிரக கோபுரத்தையும், நந்தி சிலையையும் சிதிலம் அடையாமல் அரசும், அறநிலையத் துறையும் சீரமைத்து வருங்கால சந்ததிகளும் தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.