பெண்கள் வாக்குச் சாவடிக்குள் கர்ப்பிணி பெண் ஒருவர் ஓட்டுப் போட சென்றபோது மர்ம நபர் ஒருவர் அந்த வாக்கை செலுத்தி விட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண் அதே பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வார்டு எண் 17 க்கான 17 ஆவது பெண் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்க சென்றபோது அவருடன் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிடுவது போன்று மர்ம நபர் ஒருவர் பின்னால் வந்தார்.அந்தப் பெண் வாக்கு செலுத்த முயன்றபோது திடீரென்று அந்தப் பெண்ணின் ஜனநாயக கடமையை ஆற்றவிடாமல் தடுத்ததுடன் அந்தப் பெண்ணின் வாக்கினை செலுத்தி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மர்ம நபரை கண்டுபிடிக்க கூறியும் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரியும் அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனடியாக வாக்குச்சாவடி மையப் பகுதிக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரியா பெண்ணிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரிடம் புகார் அளியுங்கள் என கூறிய பின்னர் வாக்குச்சாவடிதை மனுவாக எழுதி அந்த பெண் புகார் அளித்தார்... பின்னர் வாக்குப் பதிவு பெட்டிகள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
மேலும் இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இந்த வாக்குச்சாவடி மையத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதாகவும் அதனை சோதனை செய்த பின்னர் மர்மநபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.