தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் மேட்டூர் அணை 2 ஆண்டுகளுக்குப்பின் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
காவிரியின் துணை நதிகளான பாலாறு, தொப்பையாறு, சின்னாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனழையால் மேட்டூர் அணைக்கு ஒரு மாதமாகவே நீர்வரத்து அதிகரித்து வந்தது. கடந்த 5 நாட்களாக நீர் மட்டம் 119அடியாக நீடித்து வந்த நிலையில், அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்த நிலையில் நீர் வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் நடப்பாண்டில் மேட்டூர் அணை முதல்முறையாக நிரம்பியது.
கட்டப்பட்ட 88 ஆண்டுகளில் இதுவரை 41 முறை அதன் கொள்ளளவை மேட்டூர் அணை எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் இடது கரையில் உள்ள 16 கண் உபரிநீர் போக்கி பகுதியில் பூஜை செய்த அதிகாரிகள், மலர் தூவி காவிரி நீரை வணங்கினர். மேட்டூர் அணையில் 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.