தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர் வந்து கொண்டிருப்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான பிலிகுண்டுவிற்கு இன்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1,20,000 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தது. முன்தாக நேற்று மாலை கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணயிலிருந்து 1,25,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் நாளை காலை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒக்கேனக்கல் சுற்றுலாத் தளத்தில்33-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடையை நீடித்துள்ளது. இதனை தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துள்ளதால் காவேரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டதாக பரிசல் ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நீர்வரத்தின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்பதால், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது. தொடர்ந்து கூடுதலான காவல், தீயணைப்பு, ஊர்க்காவல், வருவாய் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒக்கேனக்கல் சுற்றுலாத் தலத்தை நம்பியுள்ள சிறு வியாபாரிகள் மற்றும் பரிசல் ஓட்டிகளும் வருவாய் இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி கரையோர கிராமங்களான ஊட்டமலை, ஒக்கேனக்கல், ஏரியூர், நெருப்பூர் மற்றும் நாகமரை உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து தண்டோரா மூலமும் துண்டுப் பிரசுரங்கள் மூலமும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.